புரட்டாசி மாதம் (Oct)
இந்திய நாட்டின் இன்றைய அரசியல் நிலையை ஆழமாக விவரித்து; அதன் கடுமையான குறைகளை வெளிப் படுத்தி, அதற்கு மாற்றாக என்னென்ன செய்ய முடியும் என்பதை விளக்கும் கட்டுரை. குருதிப் புரட்சி எந்தப் பயனையும் நிலையாக விளைவிக்க முடியாது. மாற்றாக அனைத்துத் தரப்பினரிடையேயும் கருத்துப் புரட்சி ஏற்பட்டு அது எண்ணப் புரட்சியாக சிந்தனைப் புரட்சியாக உருவெடுத்து விட்டால் போதும், இந்த நாட்டில் நல்ல மாற்றங்கள் உருவாகி விடும் என்பதை இந்தச் சிறு நூல் விளக்குகின்றது.
இதன் தொடர்ச்சியாக மற்றோரு சிறு நூலும் இதில் இணைந்துள்ளது. வேலூர் அருகே ஆசிரமம் அமைத்து வாழ்ந்த ஒரு ஆன்மீகப் பெரியாருக்கு குருதேவர் எழுதிய நெடிய அஞ்சல் வடிவக் கட்டுரையே இது. ஆன்மீகத் தலைவர்கள் அருளாளர்களாக செயல்பட்டு நாட்டை ஆளும் அரசியல்வாதிகளாக ஆனால்தான் இந்திய நாட்டின் குறைகளையும், கறைகளையும் முழுமையாகச் சரி செய்து உயர்த்த முடியும் என்ற கருத்தோட்டம் உள்ள கட்டுரை இது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.