தை மாதம் (Jan-2017)
திரேதா யுகத்தில் வாழ்ந்த தமிழினப் பேரருளாளர், தமிழினக் குருபீடம் ஆகிய யக்ஞவல்லியின் வரலாறு மூன்றாம் பாகம் இந்த இதழில் முதலில் தரப் பட்டுள்ளது.
தொடர்ச்சியாக தமிழர்கள் மறையாகக் காத்து வந்த சித்தர் இராமாயணமே தமிழனாகிய இராமனின் மெய்யான வரலாறு என்பதை உணர்த்தும் வண்ணம் இராமன் காலத்தில் வாழ்ந்த பதினெண் புராணங்களின் பெயர்களையும் அவைகளின் தொடர்பான தமிழின அருளாளர்களின் பட்டியலையும் அடுத்த கட்டுரை விளக்குகின்றது.
மூன்றாவதாக யக்ஞவல்லி தரும் இராமாயணக் குறிப்புக்கள் சில சித்தர் இராமாயணம் என்ற தலைப்பில் வழங்கப் பட்டுள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.